16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலில் புகுந்ததில் முதியவர் பலி!

ஆத்துார்:சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் உயிரிழந்தார்; ஹோட்டல் தொழிலாளி படுகாயமடைந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை, தொரங்கூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சேலம் மாவட்டம், ஆத்துார், முல்லைவாடியில் தங்கி, அப்பகுதியைச் சேர்ந்த ராஜா, 51, என்பவரிடம் கூலி வேலை செய்து வந்தார்.அவரது மினி டிராக்டரை நேற்று காலை 8:30 மணிக்கு சிறுவன் ஓட்டிச் சென்றார். புதுப்பேட்டை, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முன் சாலை வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், அப்பகுதி ஹோட்டலில் புகுந்தது.

அப்போது ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த, அதே பகுதியில் ஆட்டிறைச்சி கடை நடத்தும் ஆறுமுகம், 74, நாவலுாரைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளிமருது, 35, ஆகியோர் டிராக்டரில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.அங்கிருந்தவர்கள், டிராக்டரையும், ஆறுமுகம், மருதுவையும் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மருதுவுக்கு கால் முறிவு ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார், ராஜாவையும், சிறுவனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.