அகில இந்திய ரெயில்வே நீச்சல் போட்டி – தென்னக ரெயில்வே அசத்தல் வெற்றி!

இந்திய ரெயல்வேயில் உள்ள மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வே, தென்னக ரெயில்வே உள்ளிட்ட ரெயில்வே மண்டலங்களுக்கான 61-வது அகில இந்திய ரெயில்வே நீச்சல் போட்டி சமீபத்தில் கொல்கொத்தாவில் நடந்தது. இந்த நீச்சல் போட்டியில் தென்னக ரெயில்வேயை சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டனர். 

இப்போட்டியின் முடிவில் தென்னக ரெயில்வே வீரர்கள் 133 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தனர். தென்மேற்கு ரெயில்வே மண்டல வீரர்கள் 112 புள்ளிகள் எடுத்து 2-ம் இடம் பிடித்தனர். 
இந்த போட்டியில், மதுரை கோட்டத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் எமில் ராபின்சிங் 4 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றார். சென்னை டிக்கெட் பரிசோதகர் அப்பாசுதீன் 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களை வென்றார். கேரள மாநிலம் கண்ணனூர் டிக்கெட் பரிசோதகர் அனூப் அகஸ்டின் 3 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களும், சென்னை சென்டிரல் ரெயில் நிலைய டிக்கெட் பரிசோதகர் பவன் குப்தா 5 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களும் வென்றனர். 
அத்துடன் பவன் குப்தா இந்திய ரெயில்வேயில் வேகமாக நீந்தும் நீச்சல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 15 வருடங்களுக்கு பின்னர் தென்னக ரெயில்வே அகில இந்திய நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட நீச்சல் வீரர்களை தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மல்லையா, விளையாட்டு கழக தலைவரும், முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு என்ஜினீயர் மதுசூதன், உதவி விளையாட்டு அலுவலர் சாரம்மா ஆகியோர் பாராட்டினர். 
அத்துடன், 8 பதக்கங்களை வென்ற மதுரை வீரர் எமிலுக்கு மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் பிரசன்னா, கோட்ட வர்த்தக மேலாளர் வெங்கட சுப்ரமணியம், உதவி வர்த்தக மேலாளர் பிரமோத் குமார் மற்றும் வர்த்தகப்பிரிவு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.