தமிழக மீனவர் படகுகளை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் – இலங்கையிடம் இந்தியா கண்டிப்பு!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வது அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். இத்தகைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா-இலங்கை இடையே அதிகாரிகள் மட்டத்திலான கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்திய குழுவுக்கு மீன்வளத்துறை செயலாளர் ஜதிந்திரநாத் ஸ்வைன் தலைமை தாங்கினார். இலங்கை குழுவுக்கு அந்நாட்டு மீன்வள அமைச்சக செயலாளர் ரத்னாயகே தலைமை தாங்கினார். இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்துக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழக மீன்பிடி படகுகளை அணுகும்போது, உயிரிழப்பை தவிர்க்கும்வகையில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு இலங்கை தரப்பை இந்திய தரப்பு கேட்டுக்கொண்டது. மீனவர்களை பிடிக்க துணை ராணுவத்தை பயன்படுத்துமாறு யோசனை தெரிவித்தது. கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. பிரகடனம் மீனவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுமாறும் கேட்டுக்கொண்டது.
மேலும், இலங்கை அரசு வேண்டுகோளின்படி, முக்கியமான கடல் வழித்தடங்களில், கடலோர காவல்படை கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதாக இந்திய குழு கூறியது. மீன்வளத்துக்கோ, சுற்றுச்சூழலுக்கோ கெடுதல் இல்லாத மீன்பிடி முறையை பின்பற்றுமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தது.
அதற்கு இலங்கை குழு, தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட வலைகளையும், மீன்பிடி முறையையும் பின்பற்றுவதாக புகார் தெரிவித்தது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இரு நாடுகளும் இணைந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதற்கு எல்லா உதவிகளும் செய்வதாக இந்திய குழு உறுதி அளித்தது. பலப்பிரயோகம் செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதையும், மீனவர்களை மனிதாபிமானமுறையில் நடத்த வேண்டும் என்பதையும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இதற்கிடையே, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.