சோதனைகள் நீங்கி சாதனை படைக்க குச்சனூர் சனீஸ்வரரை வழிபடுங்க!!!

கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது. இங்கு வந்து வழிபட சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கும்.

தேனியில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் செண்பகநல்லூர் என்ற ஊர் இருந்தது. இப்பகுதியை ஆண்ட தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரியின் குரல் கேட்டது. “”தினகரா! உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும், என்றது. அதன்படியே, ஒருநாள் அரண்மனைக்கு வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். சந்திரவதனன் வந்ததும் அரசி கருவுற்றாள். ஆண்குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயரிட்டனர். ஆனாலும், புத்திசாலியும். தன் வீட்டுக்கு இறையருளால் வந்தவனுமான வளர்ப்பு மகன் சந்திரவதனுக்கே மன்னன் முடிசூட்டி ஓய்வு பெற்றான்.

இந்நிலையில் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. உடனே சந்திரவதனன். இப்பகுதியிலுள்ள சுரபி நதிக்கரைக்கு சென்று, இரும்பால் சனீஸ்வரர் உருவத்தை படைத்தான். அவரிடம், “”சனீஸ்வரரே! சொந்த மகனுக்கு கூட முடி சூட்டாமல், வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தை எவ்வளவு பரந்த மனம் உள்ளவர். வளர்ப்பு மகன் என்றும் பாராமல், மூத்த மகனாகக் கருதி சுயநலம் பாராமல் எனக்கு முடிசூட்டிய அவர் எவ்வளவு நல்லவர்! நல்லவர்களையும், நியாயஸ்தர்களையும் நீ அணுக மாட்டாய் என்பது தானே ஐதீகம். எனவே அவருக்கு எந்த துன்பமும் தராதே. ஒருவேளை, அவர் முன்வினைப் பயனால் துன்பத்தை அனுபவிக்க விதியிருந்தாலும், அதை எனக்கு கொடு, என்று வேண்டினான்.

சனீஸ்வர பகவான் அவனது பிரார்த்தனையில் இருந்த நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை (3மணி நேரம்) மட்டும் தினகரனை பிடித்துக்கொள்வதாக கூறி, அந்த நேரத்திற்குள் பல கஷ்டங்களைக் கொடுத்தார்.

பின்பு தினகரன் முன் தோன்றி, “”உன்னைப்போன்ற நல்லவர்களை நான் பிடிக்க மாட்டேன். இருப்பினும், இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினைப்பயனே. உன் கதையைக் கேட்பவர்கள் இனியேனும் சுயநலமின்றி பிறர் நலம் கருதட்டும். அவர்களுக்கு என்னால் வரும் கஷ்டம் குறையும்,” என்று கூறி மறைந்தார்.

பிறகு, சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். இதன் பின் செண்பகநல்லூர் என்ற பெயர் மாறி, குச்சுப்புல்லின் பெயரால் “குச்சனூர் என அழைக்கப்பட்டது. அதுவே இன்று வரை நிலைத்து விட்டது.மற்ற ஊர்களில், சிலை வடிவில் காட்சி தரும் சனீஸ்வரர், இங்கே லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

னிக்கு “ஈஸ்வரன் என்ற பட்டம் உண்டு. இதைக் குறிக்கும் வகையில் லிங்கமாக காட்சியளிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த லிங்கம் வளர்ந்து கொண்டே வந்ததாம். அதைக் கட்டுப்படுத்த மஞ்சள்காப்பு பூசப்பட்டது. அதன்பின் அதே நிலையில் நின்று விட்டது. சனி தோஷம் உள்ளவர்கள் மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். சனிபகவானுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததாகவும், இங்கு வந்து அது நீங்கியதாகவும் இன்னொரு வரலாறு சொல்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.