மேடையில் ஆடியபோது உயிர் பிரிந்த பரதக்கலைஞர்; காற்றில் கலந்த காளிதாஸ்!!
மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பரதம் ஆடிக்கொண்டிருக்கும் போதே காளிதாஸ் 54, உயிர் பிரிந்தது.
மதுரையை சேர்ந்த காளிதாஸ், மனைவி பானுமதி, பரதக்கலைஞரானமகள் பிரியதர்ஷினி, மிருதங்க கலைஞர் மகன் விஷ்வ ஹர்ஷனுடன் திருமோகூரில் வசிக்கிறார். தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக இருந்தார். ‘பிரிய கலாலயா’ என்ற பரத நாட்டிய பயிற்சி பள்ளி நடத்தினார். இவரும், மகளும் பலகோயில் விழா மேடைகளில் பரதம் ஆடியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் விழாவில், மகளுடன் பரதம் ஆடிக்கொண்டிருக்கும் போதே காளிதாஸ்சரிந்து விழுந்தார். குடும்பத்தினர், அருகில் இருந்தவர்கள் அவரை துாக்கிய போது இறந்திருந்தார். அவரது இல்லத்தில் நேற்று இறுதிச் சடங்கு நடந்தது.
பானுமதி கூறுகையில், ”திடீர் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. மூன்று நாட்களாக அவர் சோர்ந்து இருந்ததாக உடன் பணிபுரிந்தவர்கள் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன் கூட சர்க்கரை அளவு சீராக இருந்ததை உறுதி செய்தோம்,” என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.