பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயமாக்க எதிர்ப்பு!!

கொரோனா பரவல் கணிசமாக குறைய துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ‘மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியை சேர்ந்த ஒரு மாணவனின் தாய், கட்டாய முக கவச உத்தரவுக்கு எதிராக, ஆன்லைன் வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக, கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்துள்ள அவர், அதில் பெற்றோர் கையொப்பத்தை பெற்று வருகிறார். இந்த மனுவை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அனுப்ப முடிவு செய்துஉள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தொற்று பரவலின் விகிதம், குழந்தைகளின் வயதை கணக்கில் கொள்ளாமல், பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு, சர்வதேச வழிகாட்டலுக்கு எதிரானது. குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, 5 – 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, பள்ளியில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கக் கூடாது.

சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.கோடை காலத்தில் தொடர்ச்சியாக முக கவசம் அணிவது, பாக்டீரியா, பூஞ்சை போன்ற வேறு தொற்றுக்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தக் கூடும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.