பங்குச் சந்தை மோசடி : தகவல் தர மறுப்பு!

புதுடில்லி:என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பான தகவல்களை தர, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ மறுத்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் பல மோசடிகள் நடந்ததாக, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனர்களுமான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் உள்ளிட்டோர்
சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை, மிக அதிக சம்பளத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், கடந்த 2013 முதல், தேசிய பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட சோதனைகள், ஆய்வுகள் குறித்த அறிக்கைகளை கேட்டு, சுபாஷ் அகர்வால் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து உள்ளார்.
‘இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த விசாரணை எங்களின் உள் நிர்வாகப் பிரச்னை. ‘பொருளாதார ரீதியிலும், நிர்வாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால், நீங்கள் கேட்டிருக்கும் தகவல்களை அளிக்க முடியாது’ என, ‘செபி’ அமைப்பு பதில் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.