தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலனுக்காக வாரியம் சட்டசபையில் மசோதா நிறைவேறியது!!

2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் நலனை உறுதி செய்யவும், ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்களை வழங்குவதற்கான நிவாரணத்தை அளிக்கவும், நலவாரியம் ஒன்றை அமைக்க 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு இருந்தது.அதன்படி தமிழகத்தில் வாழாத தமிழர்களின் நலனுக்காக நிறுமங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்கள் அல்லது சங்கங்கள் அல்லது வேறு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச்சட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது சங்கமாக இருந்ததை வாரியமாக மாற்றியுள்ளதால் அதிலுள்ள பதவிகளையும் அதற்கேற்ற வகையில், தலைவர், உறுப்பினர் என்று மாற்றப்படுகிறது.

வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 13-ல் இருந்து 15-ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வசிக்காத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையரை அந்த வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக பதவி வகிக்கவும் அரசு முன்மொழிந்துள்ளது. அதன்படி இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த மசோதா மீது சில எம்.எல்.ஏ.க் கள் விவாதித்தனர். அதன் விவரம் வருமாறு:-

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி):- வெளிநாடு வாழ் தமிழர்கள் யாரும் இறக்க நேரிட்டால் அவர்களின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்படுகிறது. உடனடியாக உடலை கொண்டு வரும்படியான ஷரத்தை சட்டத்தில் சேர்க்க வேண்டும். இது வரவேற்க கூடிய மசோதாவாகும்.

விஜயதரணி (காங்கிரஸ்):- உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட பணிகள் உலக அளவில் தெரிந்துள்ளன.

தமிழக அரசின் செயல்பாடுகள் முன்னுதாரணமாக நிகழ்வாக உள்ளன. கடுமையான விலைவாசி உயர்வினால் இலங்கை தமிழர்கள் தவிக்கின்றனர். அவர்களின் துயர சூழ்நிலையில் நாம் உதவ வேண்டும்.

ஜி.கே.மணி (பா.ம.க.):- வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்வோர் அங்கு பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகின்றனர். சிலர் கைது செய்யப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும் சட்ட அம்சம் இந்த மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும்.

ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி):- உலக தமிழர்கள் அனைவருக்கும் இதன் மூலம் நம்பிக்கை விதைக்கப்பட்டு உள்ளது. அதற்கு பாராட்டுகள்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):- கேரளா மாநிலத்தில் உள்ளதுபோல், அதற்கான சங்கத்தை வாரியமாக மாற்றியதோடு கூடுதல் உறுப்பினர்களையும் சேர்க்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. ஐக்கிய அரபு தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை இதுவாகும்.

சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.):- வெளிநாட்டு தமிழர்கள் நலனுக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ம.தி.மு.க. வரவேற்கிறது.

தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி):- வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் இறக்க நேரிடும்போது உடலை இங்கு கொண்டு வரும் செலவை அரசு ஏற்க வேண்டும்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- இந்த மசோதாவை எங்கள் கட்சி உளமாற வரவேற்கிறது.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அந்த சட்டத்திருத்த மசோதா அவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.