ஐ.பி.எல். போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல்? – மும்பை போலீசார் விளக்கம்!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மும்பையில் தொடங்குகிறது. இதில் மும்பையில் வான்கடே, பார்போர்ன் மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. 
இந்தநிலையில் மும்பையில் கிரிக்கெட் வீரர்கள் தங்கி உள்ள டிரிடென்ட் ஓட்டல், வான்கடே மைதானம் மற்றும் டிரிடென்ட் ஓட்டல்- வான்கடே மைதானம் இடையிலான சாலையை பயங்கரவாதிகள் உளவு பார்த்ததாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. 

இதனால் மும்பையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல்களை மும்பை போலீசார் மறுத்து உள்ளனர்.
இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மும்பையில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மும்பையில் போட்டிகள் நடைபெற உள்ள வான்கடே, பார்போர்ன் மைதானத்திற்கும், வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் ஓட்டல்களுக்கும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீலும் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மும்பையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல் வந்திருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி உள்ளது. இது அடிப்படை ஆதாரமற்றது” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.