200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் – உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி நடவடிக்கை!!

பள்ளிகளுக்கு சொத்து வரி, பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை தமிழக அரசு விதிக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளை திறக்க முடியாமல், ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால், சொத்து வரி, வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான தனியார் பள்ளிகள் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை நிலுவை வைத்துள்ளன. இந்த நிலையில் சொத்து வரி கட்டாத காரணத்தால் தமிழகம் முழுவதும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 200-க்கும் அதிகமான மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன. 
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளியும் சுமார் 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரியை செலுத்த தவறினால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என உள்ளாட்சி அமைப்புகள் அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், தங்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து வரும் 26 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.