மேகதாது திட்டம்: தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்!
கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேகதாது அணை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய ஜல்சக்தி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இன்னும் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நேற்று நடந்த கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதாவது கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 13-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் பிறகு பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் எச்.கே.பட்டீல் எழுந்து, தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார்.
அவர் பேசும்போது, “தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் கா்நாடகத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு குறுக்கீடாக நிற்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் மேகதாது பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவது சரியல்ல.
மேகதாது திட்டத்திற்கு பயன்படுத்துவது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீர் அல்ல. கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீர் பங்கீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பெங்களூருவுக்கு குடிநீர் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை கண்டிக்கிறோம். அவர்களுக்கு பதில் கூறும் வகையில் நமது சட்டசபையிலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என்றார்.
அதைத்தொடா்ந்து முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் பேசும்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து சட்டசபை விவகாரம்-சட்டத்துறை மந்திரி மாதுசாமியும் பேசினார்.
இறுதியில் இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-
மேகதாது திட்டத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு மிக தெளிவாக உள்ளது. நமது நீர், நமது நிலத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த மேகதாது திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்வதால் ஒரு சொட்டுநீர் கூட வீணாவது இல்லை. அது தமிழ்நாட்டிற்கே செல்லும்.
இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய நீர் ஆணையம் மற்றும் காவிரி நிர்வாக ஆணையத்தில் கர்நாடகம் எடுத்து கூறியுள்ளது. அதற்கு தேவையான விவரங்களையும் கூறியுள்ளோம். தமிழகத்திற்கு பொதுவான ஆண்டுகளில் (வறட்சி இல்லாத) 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அதை விட கூடுதலாகவே நீர் தமிழகத்திற்கு சென்றுள்ளது.
தமிழக அரசு, தனது பகுதியில் பல்வேறு குடிநீர் திட்டங்களை மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் அனுமதி பெறாமல் அமல்படுத்தியுள்ளது. தற்போது 2-வது கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதாக அந்த மாநிலம் அறிவித்துள்ளது. இதற்கு கர்நாடகம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதை கோர்ட்டுக்கும் எடுத்து சென்றுள்ளோம்.
கர்நாடகம் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை பயன்படுத்த தமிழகம் குறுக்கீடு செய்கிறது. பெங்களூரு நகருக்கு முன்பு 9 டி.எம்.சி. காவிரி நீரை பயன்படுத்த முடிவு செய்தபோதும் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதை கர்நாடகம் பயன்படுத்தியது. மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அதன் மூலம் அனுமதி பெறுவோம்.
மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சட்டவிரோதமானது. அரசியல் அமைப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இங்கு கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதன் சாதக-பாதகங்கள் குறித்து இன்று (நேற்று) மாலையே சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். நாளையே (இன்று) சட்டசபையில், தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். கர்நாடக அரசை பொறுத்தவரையில் மேகதாது திட்டத்தில் தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.