முல்லை பெரியாறு அணை கேரளா புது கோரிக்கை!!

புதுடில்லி :’முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா தரப்பில் தாக்கலான மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, கேரளா தரப்பில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
உச்ச நீதிமன்றம் 2014ல் வழங்கிய முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான உத்தரவுக்குப் பின், அணைப்பகுதியில் பலமுறை கடும் மழைப்பொழிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அணை பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது.
எனவே, அணையின் தற்போதைய நிலவரம் குறித்து வடிவமைப்பு, புவியியல், நீரியல், அணை பாதுகாப்பு, கட்டுமானம், நில அதிர்வு உள்ளிட்ட துறைகளில் திறன் வாய்ந்த இன்ஜினியர்கள் மற்றும் நிபுணர் குழு விரிவாக ஆய்வு நடத்த வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.