மின்சார வாரியத்தில் பணி நியமனம் பெறாத 5,493 கேங்மேன் பிரச்சினைகளை தீர்க்க குழு – தமிழக அரசு நியமனம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் கேங்மேன் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புதவற்காக வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதனடிப்படையில் 90 ஆயிரத்து 124 பேர் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 106 பேர் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் வெற்றி பெற்று 9 ஆயிரத்து 613 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 5 ஆயிரம் கேங்மேன் பணி நியமனத்தை அதிகரித்து 10 ஆயிரம் கேங்மேன் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. ஆனால் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 9 ஆயிரத்து 613 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 15 ஆயிரத்து 106 பேரில் மீதம் உள்ள 5 ஆயிரத்து 493 பேரில் சிலர் தங்களும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருப்பதால் தங்களுக்கும் கேங்மேன் பணி வழங்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிக்கு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5 ஆயிரத்து 493 பேரின் பிரச்சினைகளை களைய மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.
இந்த குழுவில் தலைவருடன், உறுப்பினர் செயலாளராக திட்டப்பணிகள் முதன்மை என்ஜினீயர், உறுப்பினர்களாக சென்னை நீர் மின்சார திட்டத்தின் முதன்மை என்ஜினீயர், மின்சார வினியோகம் வடக்கு முதன்மை என்ஜினீயர் அடங்கிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராக கொண்ட 4 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவினர் கேங்மேன் பணிக்கு உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் 5 ஆயிரத்து 493 பேரின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை பரிசீலிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, ஒரு மாத காலத்திற்குள் தனது பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு குழுவுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது என்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.