புதினை எதிர்கொள்ள இந்தியா நடுங்குகிறது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
உக்ரைன் மீது ரஷியா இன்று 27-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா இதுவரை ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ரஷியா மீது மென்மையான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினை தனிமைப்படுத்துவதில் குவாட் அமைப்பில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் (அமெரிக்கா – இந்தியா – ஜப்பான் – ஆஸ்திரேலியா) செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பதிலளித்த ஜோ பைடன், ரஷிய அதிபர் புதினின் ஆக்ரோஷித்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுப்பதில் குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகவும் உறுதியாக உள்ளன. ஆனால், ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிப்பது, ரஷிய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது’ என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.