நீங்கள் ஒரு ஸ்பைடர்மேன்; நிதின் கட்காரிக்கு பா.ஜ.க. எம்.பி. புகழாரம்!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 11ந்தேதி வரை நடைபெற்றது. அதன்பின்பு, கடந்த 14ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி ஏப்ரல் 8ந்தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வை சேர்ந்த அருணாச்சல பிரதேச கிழக்கு தொகுதிக்கான எம்.பி. தபீர் காவ், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மானியக்கோரிக்கைக்கு ஆதரவு கோரும் விவாதத்தின்போது கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரியை ஸ்பைடர் மேன் என்று பாராட்டி பேசினார். நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் வகையில், சிலந்தி தனது வலையை பின்னுவது போல, சாலைகளை கட்காரி அமைத்துள்ளார். அதனால் கட்காரிக்கு ஸ்பைடர் மேன் என நான் பெயரிட்டு உள்ளேன் என கூறினார்.
சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, நாடு முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 37 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன என தெரிவிக்கிறது.
சமீபத்தில், கர்நாடகாவில் ரூ.19,930 கோடி முதலீட்டில் 46 தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை கட்காரி தொடங்கி வைத்து அதற்கு அடிக்கல் நாட்டினார். இதனால், போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன், எரிபொருள் செலவிடுவதும் குறையும். குறிப்பிட்ட இடத்திற்கு அதிவிரைவாக சென்றடையலாம் என்று கட்காரி குறிப்பிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.