அரசு பஸ்களுக்கு தனியார் ‘பங்க்’குகளில் டீசல்: நேரடி கொள்முதல் அதிரடியாக நிறுத்தம்!

சென்னை: மொத்த டீசல் கொள்முதல் விலை உயர்வு எதிரொலியாக, ஆயில் நிறுவனங்களிடம் இருந்து போக்குவரத்து கழகங்கள் நேரடியாக கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு, தனியார் பங்குகளில் இருந்து பணிமனைகளுக்கு டீசல் சப்ளை துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வெளி மார்க்கெட்டில், நேற்றைய நிலவரப்படி டீசல் லிட்டர் 93.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், மொத்தமாக கொள்முதல் செய்யும் போக்குவரத்து கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், போலீஸ் உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு, மார்ச் 17 முதல் மொத்த கொள்முதல் டீசல் விலையை, 118.16 ரூபாயாக உயர்த்தி ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.

எட்டு கோட்டங்களில் நாள் ஒன்றுக்கு, 14.80 லட்சம் லிட்டர் டீசலை பயன்படுத்துகின்றனர். மொத்த கொள்முதல் விலை உயர்வால், நாள் ஒன்றுக்கு 2.87 கோடி ரூபாய்; மாதத்துக்கு 89 கோடி ரூபாய்; ஆண்டுக்கு 1,068 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.இதை தவிர்க்கும் வகையில், மார்ச் 19 முதல் தனியார் பெட்ரோல் ‘பங்க்’குகளில் இருந்து டீசல் கொள்முதல் செய்யப்படுகிறது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:போக்குவரத்து கழகங்கள் பொது சேவை அளிப்பதால், அவற்றுக்கு மொத்த கொள்முதல் விலையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியும் பலன் அளிக்கவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.