வெளிநாடுகளில் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை சளி, காய்ச்சல் இருந்தால் பரிசோதனை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!
புதுடெல்லி: சளி, காய்ச்சல் மற்றும் சுவாச தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்காணிக்கும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, தீவிர கொரோனா பரிசோதனைகள் சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘சளி, காய்ச்சல், சுவாச தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரை மீண்டும் கண்காணிக்க தொடங்குங்கள். அவர்கள் ெகாரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று உறுதியானால், அவர்களின் வைரஸ் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி போதுமான எண்ணிக்கையிலான மாதிரிகள் சோதனைக்கு சமர்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான், புதிய உருமாற்ற வைரஸ்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.