பட்ஜெட்டில் கோவை, திருப்பூர் புறக்கணிப்பு!!!

கோவைக்கென தி.மு.க., அரசு ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு, தமிழக பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படாதது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., அரசு கடந்த ஆண்டில் பொறுப்பேற்ற பின், முழுமையான பட்ஜெட் முதல் முறையாக நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு 100 சதவீதத் தோல்வி கிடைத்ததால், ஐந்தாண்டுகளுக்கும் எந்தத் திட்டமும் கோவைக்கு வராது என்று கூறப்பட்டது. கோவையை தி.மு.க., அரசு புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஆனால் கோவையை தி.மு.க., புறக்கணிக்கவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கோவையின் நீண்ட கால தேவையான விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்த, 1,132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். மத்திய சிறை இடம் மாற்றப்படும், அங்கு செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும், கோவை மெட்ரோ ரயில் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் அலுவலக அதிகாரிகளும், அமைச்சர் செந்தில்பாலாஜியும், கோவைக்கான தேவைகள் குறித்து, தொழில் அமைப்பினரிடமிருந்து கருத்துக் கேட்டனர். இதற்கேற்ப, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. இதனால் இந்த பட்ஜெட்டில், கோவைக்கென சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

சென்னைக்கு அடுத்த பெரிய நகரமும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும் ஈட்டித்தரும் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு எந்த சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை; ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கும் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.பொத்தாம்பொதுவாக கோவையில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது; இதே அறிவிப்பு, பலமுறை பட்ஜெட்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் எந்தத் தொழிற்பேட்டையும் அமைக்கப்படவில்லை.

அதேபோல, முதல்வர் அறிவித்த கோவை செம்மொழிப் பூங்கா திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் எதற்குமே நிதி ஒதுக்கவில்லை.இந்தத் திட்டங்களுக்கு குறைந்தபட்சமாக ஏதாவது ஒரு தொகை ஒதுக்கியிருந்தாலும், விரைவில் இந்த திட்டங்கள் துவங்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் நிதி ஒதுக்காததால், இந்த திட்டங்கள் வெறும் அறிவிப்பாகவே காற்றில் கரைந்து விடுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்த கோவை மக்களிடம் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரிலாவது கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்படுமா, அதற்காக கோவை, திருப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ,,க்கள் இணைந்து குரல் கொடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.