எம்.எல்.ஏ., – எம்.பி.,க்களுக்கு புது பொறுப்பு: கனிம வள அறக்கட்டளையில் சேர்ப்பு!!


கோவை: எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், கனிம வள அறக்கட்டளை விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2017ம் ஆண்டில் மாவட்ட கனிமவள விதிகள் உருவாக்கப்பட்டன. கனிமவளம் எடுக்கப்படுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு, கனிம வள அறக்கட்டளை நிதியம் ஏற்படுத்தும் வகையில் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டன. அறக்கட்டளையின் அறங்காவலர் குழு தலைவராக கலெக்டர், துணை தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர் இருக்கின்றனர். கனிம வளத்துறை துணை இயக்குனர் ஒருங்கிணைப்பாளராகவும், வெவ்வேறு அரசு துறைகளின் தலைமை அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். கனிம வளம் எடுக்க வசூலிக்கப்படும் உரிமக்கட்டணத்தின் ஒரு பகுதி, இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை முடிவு செய்வதில், மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையே நீடித்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில், கனிம வள அறக்கட்டளை நிதியத்தில் அந்தந்த எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் தற்போது விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு உட்பட்ட லோக்சபா எம்.பி.,க்கள், ராஜ்யசபா எம்.பி.,க்கள், மாவட்டத்தின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் உறுப்பினர்களாக பதவி வகிப்பர் என, தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.