தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டம்: முன்னெடுக்க குழு அமைக்கிறது பா.ஜ.,!!!

சென்னை : மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், தி.மு.க., அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த தமிழக பா.ஜ., தயாராகி வருகிறது.

இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 10 மாதங்களாகியும் ‘குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவது டீசல் விலை குறைப்பு’ என எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் முழுதுமாக நிறைவேற்றப்படவில்லை. ‘ரெய்டு’ பயத்தால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைவர்கள், தி.மு.க., அரசை எதிர்க்காமல் மவுனமாக உள்ளனர்.

கண்துடைப்பிற்காக அறிக்கைகள் வாயிலாக, அரசை விமர்சனம் செய்வதுடன் முடித்து கொள்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தாலும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராக தஞ்சையிலும்; முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியிலும்; அரியலுார் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் நடந்த போராட்டங்களில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.