இது உங்கள் இடம்: சிரிப்பு தான் வருகிறது!
ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘தமிழர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தி.மு.க., காப்பாற்றும்’ என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ‘உக்ரைனில், 2,000 தமிழர்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில், அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து வருவதற்கான பொறுப்பை ஏற்றோம்; அனைவரும் வந்து விட்டனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் துவங்கிய பின், பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே, உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மற்றும் உக்ரைனில் வசித்தவர்கள் என, 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் நடவடிக்கையை, மீட்கப்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பாராட்டியுள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் பலர் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தி.மு.க., அரசு நியமித்த குழுவினர் தான், தமிழக மாணவர்கள் அனைவரையும் உக்ரைனில் இருந்து மீட்டு வந்தது போல பேசியுள்ளார் ஸ்டாலின். டில்லி வந்த மாணவர்களை, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்த வேலையைத் தான், ஸ்டாலின் அரசு நியமித்த குழுவினர் பார்த்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க, பிரதமர் மோடி எடுத்த துரித நடவடிக்கையும் ஒரு காரணம்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே… இதற்கு முன் பொருட்களின் மீது மட்டுமே, ‘ஸ்டிக்கர்’ ஒட்டினீர்கள். இப்போது, மத்திய அரசு செய்யும் சாதனைகளிலும், ஸ்டிக்கர் ஒட்டத் துவங்கி விட்டீர்கள். நல்லவேளை, உ.பி., சட்டசபை தேர்தலின் போது, நாங்கள் அங்கு சென்று, அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. செய்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். பா.ஜ., தோற்றிருக்கும்.
மோடிக்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்யவில்லை என்பதால் தான், பா.ஜ., வெற்றி பெற்று விட்டது என்று சொல்லாமல் விட்டீர்களே. மற்றவர்கள் செய்த வேலையை, நீங்கள் செய்ததாக காட்டிக் கொள்ளும் உங்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.