வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் : ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிராவ்லி ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினார். சற்று தாக்குபிடித்த அலேக்ஸ் லீஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட்- லாரென்ஸ் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தது. சிறப்பாக விளையாடிய லாரென்ஸ் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் தனது 25-வது சதத்தை பதிவு செய்தார்.
முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. 119 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஜோ ரூட் களத்தில் உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.