மூட்டு வலியை குணமாக்கும் காராமணி!!!

வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. குழம்பு, பொரியல், அவியல், துவையல் எனப் பல வகைகளில் சமைத்து உண்ணப்படும் இந்த காராமணியில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. காராமணியில் கணிசமான அளவு ‘கோலின்’ என்ற வைட்டமின் ‘பி’ இருப்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்தும். சிறுநீர் பிரியாது அவதிப்படுபவர்கள் காராமணியுடன் சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு கஷாயம் செய்து பருகிவர சிறுநீர் நன்கு பிரியும். காராமணியுடன் வாழைப்பூ, பூண்டு சேர்த்து துவரன் வைத்து சாதத்துடன் சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும். இதனை அவித்து அத்துடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டு வர உடம்பிலுள்ள கழிவுகளையும், விஷப் பொருட்களையும் வெளியேற்றும். காராமணி சுண்டல் செய்து, அத்துடன் வெங்காயத்தை அரிந்து போட்டு சிறுவர்களுக்கு கொடுத்தால் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை இதற்குண்டு. காராமணியை அவித்து அத்துடன் சுக்குத்தூள், மிளகுத் தூள் கலந்து சாப்பிட்டுவர மூட்டுவலி குணமாகும். வெந்தயம், கருப்பட்டியுடன் காராமணியை மிக்ஸியிலிட்டு தூளாக்கி எடுத்து களி கிண்டி சாப்பிட்டால் தசைகள் சீராக இயங்கச் செய்யும். வாரத்திற்கு 3 நாட்கள் காராமணியை துவரன் குழம்பு செய்து சாதத்தில் சேர்த்து உண்டு வர மலச்சிக்கல் ஏற்படாது. காராமணியை அவித்து அத்துடன் வெங்காயம், மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும். உடல் பளபளப்பாக திகழ்வதுடன், சரும நோய்கள் வராமல் தடுக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.