மக்களை வேண்டுமென்றே குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குவதாக அதிபர் சாடல்!!
உக்ரைனில் மரியுபோல் நகரத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கி இருந்த திரையரங்கில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்கியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நகரம் முழுவதும் ரஷ்ய விமானப் படைகள் குண்டு மழை பொழிந்தன. மரியுபோல் நகரில் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கி இருந்த திரையரங்கு ஒன்றில் ரஷ்ய ராணுவம் குண்டு வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய படைகள் தாக்குதலுக்கு அஞ்சி திரையரங்குகளில் தங்கி இருக்கும் மக்களை குறிவைத்து தாக்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘செர்னிகிவ் பகுதியில் உணவு வாங்க நின்று இருந்த மக்கள் சுடப்பட்டுள்ளனர்.இதில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர்.மரியுபோலில் மக்கள் தங்கி இருந்த திரையரங்கு ஒன்றில் வேண்டுமென்றே சக்தி வாய்ந்த குண்டை ரஷ்யா
வீசியுள்ளது. ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன,’என்றார்.
மரியுபோல் திரையரங்கு மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கார்க்கிவ் நகரத்திலும் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிகின்றன. மரியுபோல், கார்க்கிவ் நகரங்களில் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ராணுவ கட்டமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்படும் என்று முதலில் கூறி போரை தொடங்கிய ரஷ்யா, தற்போது பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.