பஞ்சாப்பை மேம்படுத்தும் பணி இன்றே தொடங்கும்: முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான் பேச்சு!!
எஸ்பிஎஸ் நகர்: பஞ்சாப் மாநிலத்தை மேம்படுத்தும் பணி இன்றிலிருந்தே தொடங்கும் என்று, இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து, இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பக்வந்த் மான் நேற்று பதவியேற்றார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்விக கிராமமான ஷாகித் பகத்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்கலனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பகவந்த் மான் மட்டுமே நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அனைவரும் மஞ்சள் நிறத்தில் தலைப்பாகை அணிந்து வந்திருந்தனர். இதேபோல் விழாவில் கலந்து கொண்ட ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகையும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து இருந்தனர். பதவியேற்ற பின்னர் பேசிய முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ”புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி அரசானது வேலைவாய்ப்பின்மை, ஊழல், விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும். இன்று முதலே அரசின் பணிகள் தொடங்குகின்றது. மாநிலத்தில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை டெல்லியில் ஆத் ஆத்மி அரசினால் மேம்படுத்தப்பட்டு இருப்பது போல் மேம்படுத்தப்படும்” என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.