சர்வதேச நீதிமன்ற விசாரணையில் ரஷியாவிற்கு எதிராக வாக்களித்த இந்திய நீதிபதி!

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. 
அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. 
குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் ரஷியாவின் தாக்குதல் நடைபெற்று  வருகிறது.
இதற்கிடையில், தங்கள் நாட்டில் ரஷியா இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. 
இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.
சர்வதேச நீதிமன்றத்தில்  உக்ரைனின் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் தெரிவித்ததாவது, “ரஷியா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், ரஷியாவை நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது. மேலும், உக்ரைன் தனது பாதுகாப்புக்கு சர்வதேச சக்திகளால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது” என்று தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவை சேர்ந்த நீதிபதி  டல்வீர் பண்டாரி,  ரஷியாவிற்கு எதிராக வாக்களித்தார். முன்னதாக, டல்வீர் பண்டாரி இந்திய அரசின் சார்பில் பெரும்பான்மை ஆதரவுடன் சர்வதேச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்.
அவருடைய இந்த வாக்களிப்பு உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது.முன்னதாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷியாவிற்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிப்பதை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
ரஷிய தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, “உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதல் தற்காப்புக்காக செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தது அதனை நியாயப்படுத்தியது.
ஆனால் சர்வதேச நீதிமன்றமோ,  “உக்ரைனில் இனப்படுகொலை செய்யப்பட்டது என்ற ரஷியாவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் இல்லை” என்று சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி டோனோகு தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விசாரணையை தொடர்ந்து, உக்ரைன் மீது நடத்திவரும் ராணுவ நடவடிக்கையை ரஷியா உடனடியாக நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.