உலகிலேயே கவுதம் அதானிதான் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல்!!
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாகும். உலக பணக்காரர்கள் தொடர்பான 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 2021ம் ஆண்டில் உலகிலேயே கவுதம் அதானிதான் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் ஒவ்வொரு வாரமும் அதானி ரூ. 6000 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். ஒரே ஆண்டில் அவரது வருவாய் இருமடங்காக உயர்ந்துள்ளது. அவரது நிகர சொத்து சேர்ப்பு எலன் மஸ்க் போன்ற உலக கோடீஸ்வரர்களை விட அதிகம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் உலக பணக்காரர் பட்டியலில் 313வது இடத்தில் இருந்த அவர், கிடுகிடுவென உயர்ந்து 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஒரே ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு 153% உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1830% உயர்ந்துள்ளது. ஆசியாவின் பெரும் பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். உலக செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9வது இடத்தை பிடித்துள்ளார். ஓரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 24 % வரை உயர்ந்து, சுமார் 78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் புதிய கோடீஸ்வரர் என்ற பெயரை நைகா நிறுவனர் ஃபல்குனி நாயர் பெற்றிருப்பதாக சர்வதேச பணக்காரர்கள் பட்டியல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.