100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கேள்வி!!
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு தேவை, அதனை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?’ என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக எம்பி தயாநிதி மாறன், ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் வருமாறு: கொரோனா நோய் தொற்று காலத்திற்கு முன்பும், தற்போதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளுக்கான தேவைகள் அதிகரிப்பது குறித்து ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனவா? கடந்த 3 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்து உள்ளனர். அதற்கான தேவைகள் எவ்வளவு என்பது குறித்தும் கிராமப்புற அளவில் ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளனவா? எனில், அது குறித்த விவரங்களை தெரியப்படுத்தவும்.
அதிகரித்து வரும் கிராமப்புற வேலையின்மை மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான பற்றாக்குறை மத்தியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைகளுக்கான தேவை அதிகரிப்பது குறித்து ஊடக அறிக்கைகள் சுட்டி காட்டியதை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? கடந்த நிதியாண்டில், பல மாநிலங்கள் இத்திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையால், நிதி அளவை மீறி செலவு செய்துள்ளன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் குறைக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டை நிர்வகிப்பதற்கு ஒன்றிய அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போகிறது? இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.