வரலாறு படைக்குமா ஆஸ்திரேலிய அணி-உச்சகட்டப் பரபரப்பில் கராச்சி டெஸ்ட்!!!

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 506 ரன்கள் இலக்கை நோக்கி ஆடுகிறது. கடைசி நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. இருப்பினும் ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலியா 408 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியது. 

3-வது நாள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா சிறிது நேரம் பேட்டிங் செய்து விட்டு 2 விக்கெட்டுக்கு 97 ரன்னில் ‘டிக்ளேர்’ செய்தது. 
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. இதையடுத்து இதுவரை யாருமே எட்டிராத இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 21 ரன்னுக்குள் இமாம் உல்-ஹக் (1 ரன்), அசார் அலி (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது.
அதன் பிறகு 3-வது விக்கெட்டுக்கு மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக்கும், கேப்டன் பாபர் அசாமும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஷபிக் 20 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற சுமித் கோட்டை விட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தானின் நிலைமை மோசமாகியிருக்கும்.
அதன் பிறகு இந்த கூட்டணியை ஆஸ்திரேலிய பவுலர்களால் அசைக்க முடியவில்லை. 2 ஆண்டுக்கு பிறகு மூன்று இலக்கத்தை தொட்ட பாபர் அசாம் தனது 6-வது சதத்தை பதிவு செய்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 82 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 102 ரன்களுடனும் (197 பந்து, 12 பவுண்டரி), அப்துல்லா ஷபிக் 71 ரன்களுடனும் (226 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும்  314 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் – அப்துல்லா ஷபிக் ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷபிக் 96 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன் பிறகு களமிறங்கிய வாவத் ஆலம் 9 ரன்களில் வெளியேறினார். தற்போது வரை பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்துள்ளது. வெற்றிக்கு மேலும் 221 தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் 150 ரன்களுடன்  களத்தில்  உள்ளார்.
53 ஓவர்கள் மீதம் இருக்க ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற மீதம் உள்ள 6 விக்கெட்களை கைப்பற்றி ஆக வேண்டும். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து போராடி வருவதால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கராச்சி மைதானத்தில் இது வரை ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. எனவே இந்த போட்டியை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் அந்த அணி புதிய வரலாறை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.