ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தாது!!

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள்  கட்டுப்படுத்தாது என அமெரிக்க விளக்கமளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதை ரஷ்யாவில் இருந்து வாங்க இந்தியா முனைந்துள்ளது. இதில் முதற்கட்டமாக 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.

ரஷ்யா வழங்கும் கச்சா எண்ணெய் விலை சந்தை மதிப்பை விட பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர்கள் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தாது என அமெரிக்க தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. அமிதர அதிருப்தி தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது என்று கருத தோன்றும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 வாரங்களுக்கு பின் 100 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. சீனாவில் கொரோனா அதிகரிப்பால் பல பகுதிகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கச்சா எண்ணெய் தேவை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உலக சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.