காரை ஏற்றி விவசாயிகள் படுகொலை ஆசிஷ் ஜாமீன் ரத்தை விசாரிக்க புது அமர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!

ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உபி, அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தனது காரை ஏற்றியதில் 4 பேர் பலியாகினர். இந்த வழக்கில் ஆசிஷ் உட்பட 13 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, கடந்த மாதம் 10ம் தேதி ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர், ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இத்துடன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ஷிவ் குமார் திரிபாதி, சிஎஸ் பாண்டா தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த வழக்குகள் கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதனை செவ்வாய் கிழமை (நேற்று) விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி என்வி. ரமணா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘வழக்கின் முக்கிய சாட்சியத்தை ஜாமீனில் வெளியே வந்தவர்கள் தாக்கி உள்ளனர். மேலும், உபி. தேர்தலில் பாஜ மீண்டும் வெற்றி பெற்றதால், அவர்கள் தங்கள் வழக்கை பார்த்து கொள்வார்கள் என்று மிரட்டியுள்ளனர்,’ என தெரிவித்தார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, `இந்த வழக்கை விசாரிப்பதற்கு புதிய அமர்வு அமைக்கப்படும். இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதில் இடம் பெறுவார்கள்,’ என உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.