விமானத்தில் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்ல அனுமதி: ஒன்றிய அரசு உத்தரவு!
விமானங்களில் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்கள் பாரம்பரியப்படி தங்களுடன் ‘கிர்பான்’ என்ற சிறிய கத்தியை எடுத்து செல்வார்கள். ஆனால் விமானத்தில் சக பயணிகளின் பாதுகாப்பு, விமான கடத்தலை கருத்தில் கொண்டு விமானங்களில் கிர்பான் கொண்டு செல்ல கடந்த 4ம் தேதி ஒன்றிய அரசு தடை விதித்தது. இதுகுறித்து சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டியின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தமி ஒன்றிய சிவில் விமான போக்குரவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசின் இந்த உத்தரவு சீக்கியர்களின் உரிமைகளின் மீது விழுந்த அடி ஆகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கிர்பான் எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘உள்நாட்டுக்குள் பயணிக்கும் இந்திய விமானங்களில் மட்டும் சீக்கிய பயணிகள் கிர்பானை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படும். அதன்படி கத்தி 9 இஞ்ச்க்கு அதிகமாக இருக்க கூடாது. அதே போல் கத்தியின் கூர்மையான பகுதி 6 இஞ்ச்க்கு மேல் இருக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.