ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நடவடிக்கை: பெட்ரோலிய மந்திரி!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்வி மற்றும் துணைக்கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதிலளித்தனர். இதில் முக்கியமாக, ரஷியாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்குகிறதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பெட்ரோலிய மந்திரி ஹர்திப் சங் புரி பதிலளிக்கையில், ‘2 ஆண்டுகளாக நீடிக்கும் பெருந்தொற்று, கடந்த சில வாரங்களாக நடந்து வரும் ரஷியா-உக்ரைன் போர் போன்ற நெருக்கடியான இந்த சூழலில், கச்சா எண்ணெய்க்கான அனைத்து வாய்ப்புகளும் ஆராயப்படும்’ என கூறினார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக தானே அந்த நாட்டுடன் பேசி வருவதாக கூறிய ஹர்திப் சிங் புரி, இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து இறக்குமதிக்கான சூழல் உறுதியானதும் அதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த பாதுகாப்பு படை விமான விபத்துகள் குறித்த கேள்விகளுக்கு ராணுவ இணை மந்திரி அஜய் பட் பதிலளித்தார்.
அவர் கூறும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளில் இருந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என 45 விபத்துகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக விமானப்படை மட்டுமே 29 விபத்துகளை சந்தித்துள்ளது’ என கூறினார்.
இந்த விபத்துகளில் மொத்தம் 42 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறிய அஜய் பட், இதிலும் 34 பேரை பறிகொடுத்து விமானப்படை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் விமான போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் விமானிகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.
அதில் அவர் கூறுகையில், பல்வேறு விமான நிறுவனங்களில் சுமார் 9 ஆயிரம் விமானிகள் பணியாற்றி வருவதாகவும், இதில் 87 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் விமானிகளுக்கான பற்றாக்குறை இல்லை எனவும் வி.கே.சிங் தெரிவித்தார்.
இதற்கிடையே நடப்பு நிதியாண்டில் ரூ.1.07 லட்சம் கோடி கூடுதல் செலவின விவரங்களை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. துணை மானிய கோரிக்கைகளின் மூன்றாவது தொகுதியின்படி, ரூ.1.58 லட்சம் கோடிக்கு மேல் மொத்த கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இதில் உர மானியம் ரூ.14,902 கோடி உள்பட பல்வேறு செலவினங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.