மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் : ஒன்றிய அரசு!!

வரும் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ஒன்றிய எச்சரித்துள்ளது. தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறாகத் தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது.

ஆதார் கார்டு உள்ளவர்கள் அவர்களது பான் கார்டையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பான் – ஆதார் இணைப்புக்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தொடக்கத்தில் பான் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க 2020 மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜூன் 30ம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் கடைசியாக வெளியாகியுள்ள அறிவிப்பில் மார்ச் 31 2022 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மேலும் அவகாசம் வழங்கப்படாது என்றும் மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.