‘தக்காளி, உருளைக்கிழங்கு விலையை தெரிந்துகொள்ள அரசியலுக்கு வரவில்லை’ – இம்ரான்கான்!!

நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக அந்த நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதற்கு பிரதமர் இம்ரான்கான் அரசே காரணம் எனவும், இதனால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்துள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபிசாபாத் நகரில் நடைபெற்ற அரசியல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

பேரணியில் அவர் பேசுகையில், “உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் எனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக நாட்டு மக்கள் எனக்கு துணை நிற்பார்கள். எஞ்சியிருக்கும் எனது பதவிக்காலத்தில் பாகிஸ்தான் சிறந்த நாடாக மாறப்போகிறது. அரசாங்கம் அறிவித்துள்ள சலுகைகள் விரைவில் பலனை தரும்.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விலையை அறிய நான் அரசியலில் சேரவில்லை. நாட்டின் இளைஞர்களுக்காக நான் அதில் இணைந்தேன். நாம் ஒரு பெரிய தேசமாக மாற விரும்பினால், நாம் உண்மையை ஆதரிக்க வேண்டும், இதைத்தான் கடந்த 25 ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன்” என கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.