கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சீனாவில் மீண்டும் ஊடரங்கு: தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்!
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் சீனாவில் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகளால் சீன அரசு விரைவிலேயே கொரோனாவை கட்டுப்படுத்தியது. அதன் பிறகு எந்த அலையும் அந்நாட்டில் ஏற்படவில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்ட நிலையில், சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,400 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சீன மக்கள் மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளனர்.
நேற்றும் ஒரே நாளில் 2,300 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஷாங்காய் முதல் சென்ஜென் மாகாணம் வரை பல நகரங்களில் நேற்று முதல் மீண்டும் ஊரடங்கு அமலானது. சீனாவின் சிலிக்கான் வேலி எனப்படும் சென்ஜென் நகரில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடி பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 1.7 கோடி மக்கள் கொண்ட இந்நகரம் முதல் நாள் ஊரடங்கில் வெறிச்சோடியது. இந்நகரில் உள்ள பாக்ஸ்கான், யுனிமைக்ரான் டெக்னாலஜி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை தங்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன. சாங்க்சன் நகரில் உள்ள டொயோட்டா நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதே போல் இன்னும் பல முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் மொத்தமாக 8,378 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இந்தாண்டு இரண்டரை மாதங்களில் மொத்த தொற்று எண்ணிக்கை 9,000ஐ தாண்டி உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், கொரோனாவால் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.