உக்ரைனுக்கு எதிரான போரில் சீனாவிடம் ஆயுத உதவி கோருகிறது ரஷ்யா: அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

உக்ரைன் மீதான போரில், சீனாவிடம் ராணுவ உதவி கோரி உள்ள ரஷ்யாவுக்கு உதவினால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 19வது நாளாக நேற்று நீடித்தது. உக்ரைனின் கார்கிவ், கெர்சன், செர்னோபில் உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த போரை நிறுத்தும்படியும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணவும் இருநாடுகளின் அதிபர்கள் உடன் பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். பல்வேறு நாடுகளும் போரை நிறுத்த முயற்சித்து வருகின்றன. ஆனால், போர் நீடித்து வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா கல்வி நிறுவனங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் என்று பாராமல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே, ரஷ்யா சீனாவிடம் ராணுவ உதவி கேட்டுள்ளதாக அமெரிக்கா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் அதிகரிக்க சீனாவிடமிருந்து ரஷ்யா ராணுவ ஆயுதங்களை கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல, பொருளாதார தடைகளை சமாளிக்க, சீனாவிடம் பொருளாதார உதவி கேட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்த குற்ற சாட்டை ரஷ்யா, சீனா இருநாடுகளும் முற்றிலும் மறுத்துள்ளன.

அதே போல, உக்ரைன் மீது ரஷ்யா ரசாயனம், உயிரி ஆயுதங்களை பயன்படுத்த இருப்பதாக தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், அவற்றை பயன்படுத்த ரஷ்யாவுக்கு சீனா மறைமுகமாக சொல்லி கொடுப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.  சீனாவின் இரு பெரும் வர்த்தக நட்பு நாடுகளாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளன. இந்நாடுகளின் மிகப் பெரிய சந்தையை இழக்க சீனா விரும்பவில்லை. எனவே, உக்ரைன் மீதான ரஷ்ய போரினால், சீனா இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து, இருநாடுகளின் நட்புக்கும் எல்லையில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷ்யா தப்புவதற்கு சீனா உதவ கூடாது. அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். இதனை மீறி சீனா நடந்து கொண்டால், அதன் விளைவுகள் முற்றிலும் கடுமையாக இருக்கும். உலக நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து தப்புவதற்கு ரஷ்யாவுக்கு இரண்டாவது வாய்ப்பு எதுவும் வழங்கப்படாது,’’ என்று தெரிவித்தார்.

தொடர் குண்டுமழை: உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி இருப்பதால் கீவின் கிழக்கில் உள்ள ப்ரோவரி, இர்பின், புச்சா, ஹோஸ்டோமெல், கார்கிவ், மைகோலேய்வ் நகரங்களில் குடியிருப்பு பகுதிகள், ரிவ்னி நகரில் தொலைக்காட்சி கோபுரம், ரஷ்ய எல்லையையொட்டிய கார்பதியான் மலைப் பகுதிகள், செர்னிகிவ் நகரில் 3 வான்வெளி தாக்குதல் என உக்ரைன் நகரங்களில் இரவு முழுவதும் தொடர் குண்டுமழையின் சத்தம் கேட்டு கொண்டுள்ளது. பல பகுதிகளில் நாள் கணக்காக மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்களை மீட்க மேலும் சில மனித நேய பாதைகள், மனிதாபிமான உதவிகள் வழங்க இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.