அணுமின் நிலையத்தை சேதப்படுத்தி விட்டனர்!

உக்ரைனின் பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்று செர்போனிபில் நகரில் அமைந்துள்ளது. செர்போனிபில் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் சென்றதைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்தையும் ரஷ்ய படை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கிடையே அணுமின் நிலையத்தில் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பீதி ஏற்பட்டது.

ஆனாலும் இந்த கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இந்நிலையில், செர்னோபிள் அணுமின் நிலையத்தின் உயர்மின் அழுத்த லைனை ரஷ்ய படையினர் சேதப்படுத்தி இருப்பதாக உக்ரைன் மின்வாரிய அதிகாரிகள் புகார் கூறி உள்ளனர்.

ரஷ்யாவிடமிருந்து கம்மி விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடையால் ரஷ்யாவால் அதன் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கான பணத்தை ரூபாய்-ரஷ்ய கரன்சி ரூபிளில் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. அதில் ரஷ்யாவிடமிருந்து பெறப்படுவது வெறும் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே. உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஒன்றிய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் ரஷ்யாவின் சலுகையை ஏற்க இந்தியா முடிவு செய்திருப்பதாக அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில நடைமுறை சிக்கல் இருப்பதால் அவற்றை முடித்தவுடன், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு கச்சா எண்ணெய் வாங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதே சமயம் ஒன்றிய நிதி அமைச்சர், வெளியுறவு அமைச்சகங்கள் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. கச்சா எண்ணெய் தவிர பிற பொருட்களையும் குறைந்த விலைக்கு தர ரஷ்யா முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனை வீழ்த்த ரஷ்யா திணறுவது ஏன்?: உலகின் மிகப் பெரிய படைகளில் ஒன்றான ரஷ்ய ராணுவம் இப்போரில் பல இடங்களில் தொழில்நுட்பம், உத்தியை கையாளும் ரீதியில் தோல்வியை தழுவி உள்ளது. ரஷ்ய படைகளின் டாங்கிகள் எரிபொருள் இல்லாமல் பல இடங்களில் நின்றதால் வீரர்கள் எரிபொருள் திருட வேண்டியதாயிற்று.  வீரர்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள் வழங்கியதால் கடைகளுக்குள் புகுந்து கோழி இறைச்சி உள்ளிட்ட பொருட்களை திருட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். படைப் பிரிவுகளுக்கும் வீரர்களுக்கும் இடையேயான தகவல் குறியீடுகளாக மாற்றப்படவில்லை. இதனால் உக்ரைன் படையினரால் எளிதில் உட்புகுந்து தாக்க முடிந்தது. உக்ரைன் வீரர்களால் தாக்கப்படும் வரை, ரஷ்ய வீரர்கள் இதனை ஒரு போர் ஒத்திகையாக கருதியது தெரிய வந்துள்ளது. அதே போல, உக்ரைனை விட மிகப் பெரிய விமானப்படை இருந்த போதிலும், வான்வழி தாக்குதலில் ரஷ்ய படைகள் பின்தங்கியுள்ளன. மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ரஷ்ய ஆயுதங்களின் செயல்திறன் ஒன்றும் சொல்லி கொள்ளும்படியாக இல்லை.

நேட்டோ நாடுகள் மீது தாக்குதல்: மேற்கு உக்ரைனில் போலந்து எல்லையையொட்டிய பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைன் வான்வெளியை பறக்க தடை விதிக்கும் பகுதியாக அறிவிக்க அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கு விடுத்த அறிக்கையில், “உக்ரைன் வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால், ரஷ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ நாடுகளின் எல்லையை தாக்குவதற்கு அதிக நேரமாகாது. நேட்டோ நாடுகளின் மக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள்,’’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 4ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை பெலராசில் நடந்தது.

இன்ஸ்டாகிராம் தடை: உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய மக்கள் தகவல் பெறுவதை தடை செய்யும் வகையில், இம்மாத துவக்கத்தில் பேஸ்புக், டிவிட்டர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. தற்போது நேற்று முதல், இன்ஸ்டாகிராமும் தடை செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா ராணுவம், ரஷ்யர்களுகு எதிராக வன்முறையை தூண்டும் செய்திகளை வெளியிட அனுமதித்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.