18 நாட்களாக நீடிக்கும் போர் முடிவுக்கு வருமா? உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை; காணொளி மூலம் நடக்கிறது!!

உக்ரைன் மீதான போர் 18-வது நாளாக நீடித்த நிலையில், ரஷிய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள்தீப்பற்றி எரிந்து வருகின்றன. உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன. உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன.

வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன. இதனிடையே உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஏற்கனவே இதேபோன்று நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை புதின் நிராகரித்துவிட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை அவர் ஏற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புதின் தெரிவித்தார். துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் உக்ரைன்-ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் – ரஷியா இடையே இன்று காணொலி காட்சியின் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஷியா-உக்ரைன் பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கும் என்று உக்ரைனிய தூதுக்குழுவை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷிய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே நடந்த நேரடிச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தையில் முன்னேறி வருவதாக இரு தரப்பும் கூறியதை அடுத்து அடுத்த சுற்று பேச்சு வார்த்தை உறுதியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.