ரஷிய தாக்குதல்: உக்ரைனில் இதுவரை 104 மருத்துவமனைகள் சேதம்!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்த ரஷியா தொடர்ந்து 19-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். உக்ரைனிலிருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மரியுபோல் நகரில், இதுவரை சுமார் 2,100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 7 மருத்துவமனைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஸ்கோ தெரிவித்துள்ளார். மேலும் 104 மருத்துவமனைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 6 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.