சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்..!!

2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில்தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலம் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது.

ஆனால் சீனா கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது.

ஆனால் இன்னமும் சீனா இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்கிறது. குறிப்பிட்டு செல்லவேண்டுமானால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பூஜ்ய சகிப்புத்தன்மை அணுகுமுறையை சீனா கையாண்டு வருகிறது.
இந்த சூழலில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது.

இதனைத்தொடர்ந்து சீனாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக நேற்று முன்தினத்தை காட்டிலும் பாதிப்பு 2 மடங்காக அதிகரித்தது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் உள்ள 19 மாகாணங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் இன்று 1,436 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சீனாவின் பல்வேறு வடகிழக்கு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. வட கொரிய எல்லைக்கு அருகில் உள்ள யான்ஜி மாகாணம், சுமார் 7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தொழில் நகரமாகும். அங்கு இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.