இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி!
பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமும், 2018-ம் ஆண்டு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 0-6, 4-6 என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீராங்கனை வெரோனிகா குடர்மெட்டோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி பிழைத்தார். நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய நடால், 21 வயதான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) சந்தித்தார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றி நிலையில் 3-வது செட்டில் கோர்டா 5-2 என்ற கணக்கில் முன்னிலையுடன் வெற்றியின் விளிம்புக்கு நகர்ந்தார்.
அதன் பிறகு சுதாரித்து மீண்ட நடால் ஒரு வழியாக ‘டைபிரேக்கர்’ வரை போராடி வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 29 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான ஆட்டத்தில் நடால் 6-2, 1-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கோர்டாவை தோற்கடித்தார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத நடால் தொடர்ச்சியாக பெற்ற 15-வது வெற்றி இதுவாகும். அடுத்து டேனியல் இவான்சுடன் (இங்கிலாந்து) மோதுகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.