ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு :ஒன்றிய அரசு!!

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற மராட்டிய வர்த்தகம் தொழில் மற்றும் வேளாண்மை சங்கத்தின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஷ்யா, உக்ரைன் போர் சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படும் தகவல் குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், மாறிவரும் சர்வதேச சூழ்நிலையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார்.சர்வதேச சந்தை நிலவரம் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகவும் எதிர்காலத்தில் மக்கள் எந்த பாதிப்பையும் சந்தித்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் உள்ளதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து கருத்து தெரிவிப்பது கடினம் என்றார் அவர். இது குறித்து ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்யும் என்றும் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.