உயிருடன் நாடு திரும்பியது அதிசயம்; சுமியில் சிக்கிய மாணவர்கள் கண்ணீர்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 17 நாட்களான நிலையில், அங்கு சிக்கி இருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தியர்களை அழைத்து வருவதற்காக, ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, 80க்கும் மேற்பட்ட முறை விமானப்படை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, இவர்கள் பாதுகாப்பாக இந்திய அழைத்து வரப்பட்டனர். கடைசியாக, சுமி நகரத்தில் சிக்கிய 700 மாணவர்கள், இந்தியர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நகரத்தை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால், இவர்களால் வெளியே வர முடியவில்லை. உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உள்ளூர் போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி ரஷ்ய, உக்ரைன் படைகளை இந்திய அரசு வலியுறுத்தியது. இதை 2 நாடுகளும் ஏற்றதால், இவர்கள் பாதுகாப்பாக அண்டை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து சிறப்பு விமானங்களின் மூலம் நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் கூறும் கண்ணீர் கதை நெஞ்சை உருக்குவதாக உள்ளது. போரில் பாதித்த உக்ரைனில் ஒவ்வொரு நேரமும் சைரன் அடிக்கும் போது உயிருக்கு பயந்து பதுங்கு குழிகளைத் தேடி ஓடி ஒளிந்து கொண்டோம். உக்ரைன், போலந்தில் உள்ள தூதரகங்கள் மூலம் சிக்கி தவித்த இந்தியர்களை அரசு பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

சுமி மாநில பல்கலைக் கழகத்தில் 6ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் தீரஜ் கூறுகையில், “சுமி நகரில் இருந்த போது, வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்திக்காத சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. புறப்படுவதற்கு முன்பு, போர் நடந்த 13 நாட்களில் பயங்கரத்தை அனுபவித்தோம். உயிருடன் தாய்நாடு திரும்பியதை ஒரு அதிசய சம்பவமாக பார்க்கிறேன்,’’ என்று கூறியுள்ளார்.

ரஷ்யா, உக்ரைனுக்கு ஒன்றிய அரசு நன்றி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `சவால்கள் நிறைந்த சுமி நகரில் இருந்து,  பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், மாணவர்களை அழைத்து வர உதவிய உக்ரைன், ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா, மால்டோவா ஆகிய நாடுகளுக்கும், குறிப்பாக உக்ரைன், ரஷ்யாவில் அதிகாரிகள், செஞ்சிலுவை சங்கத்தினருக்கும், அவர்களின் ஆதரவுக்காகவும் இந்தியா மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறது,’ என்று கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.