ஆந்திராவில் 90% அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி.. அமைச்சராகிறாரா நடிகை ரோஜா!!
ஆந்திர அமைச்சரவையில் 90% அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில் நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தலைநகர் அமராவதியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வரை பதவியேற்றபோது 2.5 ஆண்டுகளுக்கு பிகு அமைச்சர்கள் அனைவரையும் மாற்றி புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்ததை சுட்டி காட்டினார். பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே தற்போது உள்ள அமைச்சர்களில் 90% பேரை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் தற்போது மொத்தம் 26 மாவட்டங்கள் இருப்பதாக கூறிய அவர், பதவி இழக்கும் அமைச்சர்களுக்கு மாவட்ட அளவில் பதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதே நேரத்தில் பதவி இழந்தவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சீட் கொடுக்கப்படும் என்றும் வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சர்களாக பதவி வழங்கப்படும் என்றும் ஜெகன் மோகன் உறுதி அளித்தார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதல்வரான நாராயணசாமியை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.