4 மாநில வெற்றி: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் பாஜக; ஆட்சியை கைபற்ற முயற்சிக்கும் ஆம் ஆத்மி..!!

அகமதாபாத்: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்திருப்பதால் ஆம் ஆத்மியும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்திற்குச் சென்ற நிலையில் அவருக்கு தொண்டர்கள், மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த 5 மாநில தேர்தலில் உறுதியான வெற்றியை பெற வேண்டும் என கடந்த 2,3 மாதங்களாகவே பிரம்மாண்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தடுப்பு காலமாக இருந்த போதிலும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குஜராத்தில் பாஜக வெற்றியைப் பெற்றிருந்தாலும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கவில்லை. எனவே வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கால்பதிக்க வேண்டும் என பாஜக ஆயத்தமாகி வருகிறது. அதற்கான ஆயத்தப்பணியாக பிரதமரின் இந்த 2 நாள் பயணம் என்பது அமைய இருப்பதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் நிச்சயமாக பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் பாஜகவிற்கு பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், வரும் தேர்தலில் அங்கு ஆம் ஆத்மியும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. அண்மையில் அங்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கணிசமான வாக்குகளைப் பெற்ற நிலையில் குஜராத்திலும் ஆம் ஆத்மி கால் பதிக்க முயற்சிக்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், பாஜக இன்றே முண்டியடித்துக்கொண்டு குஜராத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.