நகரி சட்டசபை தொகுதியில் ரோஜாவுக்கு போட்டியாக களம் காணும் நடிகை வாணி-தெலுங்கு தேசம் சார்பில் நிற்கப்போவதாக தகவல்!

நகரி சட்டசபை தொகுதியில், ரோஜாவுக்கு போட்டியாக நடிகை வாணிவிஸ்வநாத் களம் காண உள்ளார். இவர், தெலுங்கு தேசம் சார்பில் நிற்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தபின் தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இந்நிலையில் நகரி தொகுதியில் ரோஜாவுக்கு போட்டியாக நடிகை வாணி விஸ்வநாத் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.  டோலிவுட்டின் மூத்த நடிகை வாணி விஸ்வநாத் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார்.  பொதுமக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருவதாகவும் நகரி தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்து இருக்கிறார். நகரி தொகுதியில் தனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாகவும், அவர்களின் விருப்பப்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் நடிகை வாணி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக, புதன்கிழமையன்று நகரியில் வாணி விஸ்வநாத் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த கட்சியில் இருந்து போட்டியிடுவது என்பதை இப்போது கூற முடியாது. சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும். நகரி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். எனது பாட்டி நகரியில் செவிலியராக பணி புரிந்ததையும், உள்ளூர்வாசிகள் அவருடன் பழகியதையும் அவர் நினைவு கூர்ந்தார். நகரி தமிழ் கலாசாரம் கொண்டு உள்ளதால்  இங்கிருந்து போட்டியிட்டு பொதுமக்கள் பிரச்னைகளை தீர்க்க எப்போதும் தயாராக இருப்பதாகவும்  தேவைப்பட்டால் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். வாணி விஸ்வநாத் வருகையையொட்டி அவருக்கு நகரியை சேர்ந்த பெண்கள் வரவேற்பு அளித்தனர். வாணி விஸ்வநாத் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். வாணி விஸ்வநாத் 2017-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி இணைந்தாலும் பெரிய அளவில் கட்சி பணிகளில் ஆர்வம் காட்டவில்லை.
 இந்நிலையில் வாணி விஸ்வநாத் நகரி தொகுதியில் போட்டியிட்டால் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ரோஜாவுக்கு போட்டியாக நிறுத்தப்படுவார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.