ரஷிய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு நன்றி : உக்ரைன் அதிபர்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிசக்தி ஆற்றல் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் சமீபத்தில் தடை விதித்து உத்தரவிட்டார். உக்ரைன் மீது 2 வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நகர்வை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வர்த்தகம் மூலம் வருவாய் அனைத்தையும் ரஷியா ஆயுதமாக மாற்றிவருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நல்ல தலைமைக்கு அடையாளம் இது என்றும் முழு உலகத்திற்கும் இது ஒரு சக்தி மிக்க சமிக்ஞை என்றும் அதிபர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்தப் பட வேண்டும் என்று வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ரஷியாவை வலியுறுத்தி உள்ளார். இருநாட்டு மக்களின் நலன்களுக்காக நியாயமான, உண்மையான, நேர்மையான வழியில் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.