மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு – மத்திய அரசு!

1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-போர்ச்சுக்கல் இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின்படி தனக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க முடியாது என தெரிவித்து அபு சலீம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில், அபு சலீமுக்கு தூக்கு தண்டனையோ, 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறை தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது என 2002-ம் ஆண்டு அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி போர்ச்சுக்கல் கோர்ட்டுக்கு அளித்த வாக்குறுதி இந்திய கோர்ட்டுகளை கட்டுப்படுத்தாது என தெரிவித்து சி.பி.ஐ. பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அபு சலீம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்தியா-போர்ச்சுக்கல் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி, 25 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க முடியாது. ஆனால் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் சர்வதேச தாக்கங்களை கொண்டிருப்பதால், மத்திய உள்துறை செயலாளர் தெளிவான பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.