திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளுக்கு அடுத்த மாதம் அனுமதி: தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பெருமளவில் குறைந்துவிட்டதால் இலவச தரிசன டிக்கெட்டில் கூடுதலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், 2 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு ஆர்ஜித சேவைகளிலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல்சாற்று வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், டோலோற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட கட்டண சேவையில் (ஆர்ஜித சேவையில்) பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையில் பக்தர்கள் நேரடியாகவும், மெய்நிகர் சேவையும் தொடரும். மெய்நிகர் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் அந்த சேவைகளில் நேரடியாக பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு சுவாமி தரிசனம் மற்றும் பிரசாதம் மட்டும் வழங்கப்படும்.
ஏப்ரல் 1 முதல் முன்பதிவு செய்த உதய அஸ்தமனம் சேவை டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கோவிட் விதிகளின்படி அந்தந்த சேவைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.